இலங்கையில் தமிழினத்துக்கு நடந்த மிகப்பெரிய நெருக்கடியாக இருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறையின் சார்பில், அரூர் அரசு மருத்துவமனையில் நாளை காலை 9.00 மணிக்கு இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.
2009 மே 17ஆம் தேதி, இலங்கை அரசின் இராணுவத்தால் தமிழீழ மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான படுகொலைக்கான நியாயத்தை கேட்டு, போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் இந்நாளை இன எழுச்சி நாள் என்றும் தமிழர் நினைவுநாள் என்றும் நாம் தமிழர் கட்சி கடைப்பிடிக்கின்றது. அதனையொட்டி, அக்கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பில் பல்வேறு சமூக நலப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதனடிப்படையில், நடைபெறும் இம்முகாமில் அக்கட்சியின் மாநில குருதிக்கொடை பாசறை செயலாளர் மு.ப. செந்தில்நாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. வெள்ளிங்கிரி, தருமபுரி ஒருங்கிணைந்த மண்டல குருதிக்கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மா. சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்று தலைமை வகிக்கவுள்ளனர். சமூக பொறுப்புடன் செயல்பட விரும்பும் நலனாளர் அனைவரும் கலந்து கொண்டு இந்த முகாமை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

