காரிமங்கலம், மே 11:
பதப்படுத்தப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் தயாரிப்பு, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு 08.04.2025 முதல் ஓராண்டு கால தடை விதித்துள்ள நிலையில், அதனை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் மாவட்டம் முழுவதும் நகராட்சிகள் மற்றும் ஒன்றியங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, காரிமங்கலம் ஒன்றியத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மயோனைஸின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் ஏ. பானுசுஜாதா M.B.B.S. அவர்களின் மேற்பார்வையிலும், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவினரின் ஒத்துழைப்பிலும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, கரகோடள்ளி, புளியம்பட்டி, மொரப்பூர் ரோடு மற்றும் தருமபுரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்கள், துரித உணவகங்கள் மற்றும் மயோனஸ் விற்பனை செய்யும் வியாபாரிகள் இடங்களில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, பதப்படுத்தப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் பாக்டீரியாக்களால் மாசுபட்டு, இரைப்பை, குடல் தொற்றுகள் மற்றும் உணவு நஞ்சாக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை விளக்கி, விழிப்புணர்வு செய்தனர்.
அதேவேளை, உரிய லேபிள் மற்றும் உணவு பாதுகாப்பு உரிம எண்ணுடன் கூடிய சைவ மயோனைஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனைஸ் பாக்கெட்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டியதற்கான வழிகாட்டியும் வழங்கப்பட்டது. நுகர்வோருக்கு தெளிவாக இருக்கும்படி, விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் விழிப்புணர்வு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.
கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ், ஐ.ஏ.எஸ். அவர்கள் தடை செய்யப்பட்ட மயோனைஸ் பற்றிய விழிப்புணர்வு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக