100 சதவீத வெற்றி: மலைப்பகுதி அரசு பள்ளியின் சாதனை – பெற்றோர்களும், பொதுமக்களும் பாராட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

100 சதவீத வெற்றி: மலைப்பகுதி அரசு பள்ளியின் சாதனை – பெற்றோர்களும், பொதுமக்களும் பாராட்டு.



பாலக்கோடு, மே 20- 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பெல்லுஅள்ளி கிராமத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளி, நடப்பு 2024–25 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் வெற்றி பெற்று மாநில அளவில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.


பாலக்கோடு அருகே உள்ள கேசர்குளி அணையையும், கோட்டூர், ஏரிமலை போன்ற மலைப்பகுதி கிராமங்களையும் ஒட்டியுள்ள இந்த பள்ளியில், 6ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை 310 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 10ஆம் வகுப்பில் 45, பிளஸ் 1 வகுப்பில் 36 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 51 பேர் பயின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


முழுமையான வெற்றி பெற்றதுடன், தருமபுரி மாவட்டத்திலேயே 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய மூன்றிலும் 100 சதவீதம் வெற்றி பெற்ற ஒரே அரசு பள்ளியாக பெல்லுஅள்ளி மேல்நிலைப் பள்ளி சாதனைப் படைத்துள்ளது.


அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தெரிவித்ததாவது: “பெல்லுஅள்ளி ஒரு மலைப்பகுதி கிராமம். போக்குவரத்து வசதிகள் குறைந்த நிலையில் இருக்கும் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் சிவமூர்த்தி தலைமையில், தங்களது பணியை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறைகள் என்றே இல்லாமல் மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தினர். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்த இந்த வெற்றி, ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை நிர்வாகத்தின் ஒற்றுமையின் விளைவாகும்” என்றனர்.


பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, பரிசுகளை வழங்கினர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இப்பள்ளியின் சாதனையை பெருமிதத்துடன் எடுத்துரைத்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad