பென்னாகரம், ஏப்ரல் 19:
பசுமை பரப்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், பென்னாகரம் வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் நீதித்துறை, வருவாய் துறை, ஊராட்சி ஒன்றியம், வனத்துறை மற்றும் காவல்துறை இணைந்து ஏற்பாடு செய்த மரக்கன்றுகள் நடும் விழா பென்னாகரம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 18.04.2025 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவின் சிறப்பாக தொடக்க நிகழ்வாக, பென்னாகரம் நீதிபதி நாகலட்சுமி (எ) விஜயராணி அவர்கள் மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு நிர்வாகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து பசுமை உலகுக்கான தங்களது பங்களிப்பை உறுதி செய்தனர்.
இந்த மரம் நடும் விழாவில், பென்னாகரம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒகேனக்கல் வனச்சரக அலுவலர், பென்னாகரம் காவல் ஆய்வாளர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், இந்நிகழ்வில் “இயற்கையை காப்போம்”, “மாங்கனை நேசம்”, “ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை”, “அறம் விதை அறக்கட்டளை” உள்ளிட்ட முக்கிய சமூக அமைப்புகள் தங்கள் பங்களிப்பைச் செய்தனர். புவி வெப்பமடைதலைத் தடுக்கும் வகையில் மரங்கள் நடும் செயல்கள் எப்படி பலனளிக்கின்றன என்பதை விளக்கும் விழிப்புணர்வு உரைகளும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நடை பெற்ற கலந்துரையாடலின் போது, மரக்கன்றுகளை குடும்ப நிகழ்ச்சிகளின் போது நட்டால் இயற்கையையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க முடியும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட பலரும், பிறந்த நாள், திருமணம் போன்ற சிறப்புநாட்களில் குறைந்தது ஒரு மரக்கன்றையாவது நட்டுப் பராமரிக்க உறுதி மொழி எடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக