“என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தருமபுரியில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

“என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தருமபுரியில் நடைபெற்றது.


தமிழகம் முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு தெளிவும், விழிப்புணர்வும் அளிக்கும் வகையில் “என் கல்லூரிக் கனவு” என்ற தலைப்பில் ஒரு முக்கியமான வழிகாட்டி நிகழ்ச்சி நடை பெறுகிறது.


அந்த வரிசையில், தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் இன்று (05.04.2025) ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளுக்கான கதவாக இருப்பதாகவும், அவர்களது ஆவலும் முயற்சியும் வெற்றிக்கான முதன்மையான தூண்கள் என்றும் தெரிவித்தார். மாணவர்கள் எந்த துறையில் சிறக்க விரும்புகிறார்களோ அதில் தெளிவான புரிதலுடன் நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் என கூறினார்.


மேலும், பெற்றோர்களைவிட மாணவர்களிடம்தான் உயர்கல்வி குறித்து அதிக ஆர்வம் மற்றும் பார்வை இருக்க வேண்டும் எனவும், “என் கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி அவர்களுக்கான முழுமையான வழிகாட்டியாக அமையும் எனவும் தெரிவித்தார். மாணவர்கள், பெற்றோர்கள் கூறுவதையோ அல்லது சக மாணவர்கள் தேர்வு செய்த துறையையோ பின்பற்றாமல், தனிப்பட்ட திறமைகளின்படி தங்களை முன்னெடுத்துச் செல்லும் துறையை தேர்வு செய்தால், அதிக வாய்ப்புகளை பெற முடியும் எனவும் கூறினார்.


இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ஜோதிசந்திரா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி தேன்மொழி, திட்ட அலுவலர் திரு. கண்ணன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) திரு. வேல்முருகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. சங்கர், உயர்கல்வி வழிகாட்டுபவர் திரு. லியோ லெவின், உத்வேக பேச்சாளர் திரு. சாக்கன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Dr. குமரேசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தனி வட்டாட்சியர்கள், மற்றும் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்குள் உயர் கல்வி குறித்து தெளிவையும், அவர்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் துறைகளைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad