தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு லாரி மோதியதில், நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார். இவர் நண்பருடன் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் விபத்து நேர்ந்தது.
சிக்கார்தனஅள்ளியைச் சேர்ந்த ராஜா (வயது 43), ஓசூரில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை பாலக்கோடு அருகே கொல்லப்பட்டியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஓசூருக்கு திரும்பச் சென்றார். அவருடன் இருந்த திருநிறைச்செல்வன் (வயது 42, குத்தலஅள்ளி) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில், ராஜா பின்புறம் அமர்ந்து சென்றார்.
அப்போது கல்கூடப்பட்டி பகுதியில் அவர்கள் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து வந்த சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநிறைச்செல்வன் படுகாயமடைந்தார்.
தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று, காயமடைந்தவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக