தருமபுரியில் தமிழ் வார விழா: மாவட்ட ஆட்சியரின் தலைமையில் விழா தொடக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தருமபுரியில் தமிழ் வார விழா: மாவட்ட ஆட்சியரின் தலைமையில் விழா தொடக்கம்.


தருமபுரி, ஏப்.29 –

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வார விழா இன்று தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின் பேரில் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் மாநிலம் முழுவதும் தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக அரசாணை வெளியிடப்பட்டு, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தமிழ் வளர்ச்சி, சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறைகள் இணைந்து விழா நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பேசும்போது, “மனிதனின் அறிவின் வளர்ச்சி தாய்மொழியின் வழியேதான் மேம்படக்கூடும். தமிழ் மொழியின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,” என உரையாற்றினார்.


நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேச்சுப்போட்டியும் கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டு, அதில் சிறப்பாக பங்கேற்ற இரண்டு மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசளித்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad