கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: 10.43% சர்க்கரை கட்டுமானம் – ரூ.3881.80/- வருமானம் உறுதி! - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

கரும்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: 10.43% சர்க்கரை கட்டுமானம் – ரூ.3881.80/- வருமானம் உறுதி!


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் கோபாலபுரத்தில் இயங்கி வரும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024-25 அரவைப்பருவம் கடந்த 16.03.2025 அன்று வெற்றிகரமாக முடிவடைந்தது. இப்பருவத்தில் மொத்தமாக 1,16,000 மெட்ரிக் டன் கரும்பு அரவைக்குட்படுத்தப்பட்டதுடன், சராசரி 10.43% சர்க்கரை கட்டுமானம் எட்டப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இத்தாண்டு கரும்பு சப்ளை செய்த ஆலையினருக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.3,532.80/- வழங்கப்பட்டுள்ளது. அதனுடன், தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.349/- வழங்கப்படுவதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மொத்தமாக ஒரு டன் கரும்புக்கு ரூ.3,881.80/- வரை விவசாயிகள் பெறவுள்ளனர்.


மேலும், கடந்த 2023-24 அரவைப்பருவத்தில் அதிக சர்க்கரை கட்டுமானம் பெற்றதன் அடிப்படையில், எதிர்வரும் 2025-26 அரவைப்பருவத்திற்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4,100/- க்கும் மேற்பட்ட விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனையும் பொருண்மையாகக் கொண்டு, 2024-25 நடவுப்பருவத்தில் நல்ல பருவமழை பதிவான காரணத்தால், அனைத்து விவசாயிகளும் அதிக பரப்பளவில் கரும்பு நடவு செய்யும் இந்த நன்னேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


ஆலையில் கரும்பு பதிவு செய்யாமல் உள்ள விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட கோட்ட கரும்பு அலுவலகங்களின் மூலம் பதிவு செய்ய வேண்டுமென அன்புடன் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தமிழக அரசின் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.55 இலட்சம், தற்போதைய நடவு பருவத்தில் கரும்பு பதிவு செய்துள்ள அங்கத்தினர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக நட்டமனியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டிற்கும் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதோடு, நமது ஆலையில் புதிய இரக கரும்புகள் (Co 14012 மற்றும் Co 18009) நாற்றுகளாக வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நாற்றுகளை பெற விரும்பும் அங்கத்தினர்கள் ஆலையை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். தற்போதைய நடவுக்காலத்திற்குத் தேவையான விதை நாற்றுகள் மற்றும் விதை கரணைகள் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலர்களின் வாயிலாக பெற்றுத் தங்கள் நிலங்களில் நடவு செய்யும்படி விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இவ்வாறு, சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலரும், செயலாட்சியருமான திருமதி பிரியா அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad