தர்மபுரி, ஏப். 29:
ஒகேனக்கல்லில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று எதிர்த்து, ஒகேனக்கல் மற்றும் அதன் அருகிலுள்ள ராணிப்பேட்டை, ஊட்டமலை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று (28.04.2025) தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
அவர்கள் அளித்த மனுவில், ஒகேனக்கல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாகவும், இங்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஒகேனக்கல் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால், சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு ஆற்றில் குளிப்பதால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், மது பாட்டில்களை ஆற்றின் கரையில் உடைப்பதால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும் கூறினர்.
மேலும், பரிசல் சவாரி செய்யும் பொழுது பயணிகள் மதுபோதையில் பிரச்னை விளைவிப்பார்கள் என்றும், இதனால் சுற்றுலா தளத்தின் புகழ் பாதிக்கப்படும் என்றும் மனுவில் வலியுறுத்தினர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் கடை இயங்கியபோது பல உயிரிழப்புகள் நிகழ்ந்ததை நினைவூட்டி, அப்போதைய மாவட்ட ஆட்சியர் அமுதா நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடைகளை மூடினார் என்பதையும் குறிப்பிட்டனர்.
ஆகையால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை கருதி, ஒகேனக்கல்லில் டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர்கள் மனு மூலம் கேட்டுக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக