எர்ரணஹள்ளிகாட்சி பொருளாக மாறி நிற்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி – குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

எர்ரணஹள்ளிகாட்சி பொருளாக மாறி நிற்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி – குடிநீர் இல்லாமல் மக்கள் தவிப்பு.


பாலக்கோடு, ஏப்ரல் 28:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட எர்ரணஹள்ளி ஊராட்சி, சமத்துவபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் இப்பகுதி மக்கள், பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை வழங்கக்கோரியும் மனு அளித்திருந்தனர்.

இதனையடுத்து, மத்திய அரசின் நபார்ட் திட்டத்தின் கீழ் ரூ.8.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள புதிய மேல்நிலைநீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நான்கு மாதங்களுக்கு முன்னரே முடிந்துள்ளன.

ஆனால், அதுவரை காத்திருந்த பொதுமக்களுக்கு இதுவரை ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படவில்லை. தற்போது கோடைக்கால வெயிலால் குடிநீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடைந்துள்ளது. மக்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய கடும் நிலை உருவாகியுள்ளது. இப்பகுதியில் உள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளிலிருந்து உப்புத்தன்மை கொண்ட தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.


புதிய மேல்நிலைநீர்தேக்க தொட்டிக்கு ஒகேனக்கல் குடிநீர் இணைக்கப்பட்டு மக்கள் பயன் பெற வேண்டும் என்ற பல கோரிக்கைகள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, சமத்துவபுரம் மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad