ரூ.5.16 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் – தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பாலக்கோடு பேரூராட்சியில் தீர்மானம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஏப்ரல், 2025

ரூ.5.16 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் – தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பாலக்கோடு பேரூராட்சியில் தீர்மானம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரின் வளர்ச்சிக்காக ரூ.5.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இந்த கூட்டம், பேரூராட்சி தலைவர் பி. கே. முரளி தலைமையில், செயல் அலுவலர் இந்துமதி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதலாவது அமர்வாக வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைகளில், பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது.


இந்த திட்டங்களில் முக்கியமாக:

  • 1 முதல் 18 வார்டுகளுக்குள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைத்தல்,

  • தக்காளி மண்டி அருகே ரூ.1.60 கோடி மதிப்பில் மாணவர்களுக்காக அறிவுசார் மையம் அமைத்தல்,

  • 12வது வார்டில் ரூ.30 லட்ச மதிப்பில் புதிய சாலை மற்றும் கால்வாய் அமைத்தல்,

  • பாலக்கோடு பேருந்து நிலையத்தில் ரூ.11 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்தல்,

  • 18 வார்டுகளுக்குமான பெயர் பலகைகள் அமைப்பதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு ஆகியவை அடங்கும்.


இத்திட்டங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் ஒத்துழைத்தமைக்காக, பேரூராட்சி சார்பில் நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் மோகன், சாதிக்பாஷா, சரவணன், ரூஹித், விமலன், குருமணி, ஜெயந்தி மோகன், லட்சமிராஜசேகர், பிரியாகுமார், தீபா, ஆயிஷா, சிவசங்கரி, நாகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துகள் பகிர்ந்தனர். துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்களும் பங்கேற்றனர்.


கூட்டத்தின் முடிவில் தலைமை எழுத்தர் பத்மா நன்றி தெரிவித்து கூட்டத்தை முடிக்கச் செய்தார். இந்த வளர்ச்சி பணிகள் நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, வாழ்வாதாரத் தரத்தையும் உயர்த்தும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad