உள்ளூர் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு துறை தீவிர ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

உள்ளூர் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு துறை தீவிர ஆய்வு.


தர்மபுரி, ஏப்ரல் 7 –

தமிழகத்தில் உள்ள உள்ளூர் குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு தரத்தை உறுதி செய்யும் பணியின் ஒரு பகுதியாக, மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையரின் உத்தரவின் பேரில் மாவட்டமெங்கும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தர்மபுரி மாவட்டத்தில் சமீபத்தில் ஊடகங்களில் வெளியாகியிருந்த தரமற்ற லோக்கல் குளிர்பானங்கள் குறித்து வந்த புகார்களை அடிப்படையாகக் கொண்டு, மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், ஐ.ஏ.எஸ்., அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ. பானுசுஜாதா, எம்.பி., பி.எஸ்., தலைமையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் தர்மபுரி நகராட்சியில் உள்ள ஒரு குளிர்பான தயாரிப்பு நிறுவனம் செயல்பட தடை செய்யப்பட்டதையடுத்து, தற்போது காரிமங்கலம் மற்றும் அனுமந்தபுரம் பகுதிகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றியங்களுக்கு உட்பட்ட குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, உற்பத்தி இயந்திரங்கள், மூலப்பொருட்கள், சேர்மானங்கள், சர்க்கரை உள்ளிட்டவை, மற்றும் தயாரிக்கப்பட்ட பானங்கள் எவ்வாறு பேக் செய்யப்படுகின்றன என்பதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பான பாட்டில்களில் உள்ள லேபிள்கள், உற்பத்தி தேதி, முடிவுத் தேதி, பேட்ச் எண் மற்றும் உணவுப் பாதுகாப்பு உரிமை எண்ணும் சரிபார்க்கப்பட்டன.


மேலும், பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. தர்மபுரி ரோடு, மொரப்பூர் ரோடு மற்றும் பாலக்கோடு ரோடு பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வுகள் தொடர்ந்தன. சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டதால் அவை பறிமுதல் செய்யப்பட்டன. குறித்த கடைகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.


மேலும், வெயிலில் நேரடியாக வைக்கப்படும் பானங்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் குறித்து விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. ஆய்வின்போது மொரப்பூர் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் இத்தகைய ஆய்வுகள் தொடரும் என மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad