பாலக்கோடு சுகர்மில் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மளிகை கடை மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தனர். உணவு பாதுகாப்புத் துறையும் காவல்துறையும் இணைந்து நடத்திய சோதனையின் போது, தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடையை 15 நாட்கள் இயங்க தடை விதித்து, ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா மற்றும் பாலக்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் மேற்பார்வையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில் பாலக்கோடு பகுதியில் உள்ள மளிகை மற்றும் பொட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில், ஜெர்தலாவ் ஊராட்சி சுகர்மில் பகுதியில் செயல்பட்டு வந்த மளிகை கடையில் சோதனை நடத்தப்பட்ட போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பாலக்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோகுல் சம்பவ இடத்துக்கு வந்து, கடை விற்பனையாளருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். அதன் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரின் உத்தரவைத் தொடர்ந்து, கடைக்கு 15 நாட்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.25,000 அபராதமும் உடனடியாக வசூலிக்கப்பட்டது.
பொதுமக்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அல்லது தரமற்ற உணவுப் பொருட்கள் பற்றிய புகார்களை உணவு பாதுகாப்புத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் நேரடியாக தெரிவிக்கலாம். மேலும், 9444042322 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக