பாலக்கோடு, ஏப்ரல் 10 –
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் சதிஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் திட்ட செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த மேலாண்மை, முன்னேற்றம் மற்றும் செயல்திறன் பற்றிய விவரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆன்லைனில் முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தினார். மேலும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தினை விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என்றும், ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதான பணிகளும் உடனடியாக முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
கோடை காலத்தை முன்னிட்டு, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து அனைத்து பகுதிகளுக்கும் ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தின் கீழ் தகுந்த முறையில் நீர் விநியோகம் உறுதி செய்ய வேண்டும் என கூறினார். மேலும், பழுதடைந்த மின் மோட்டார்கள் மற்றும் தெருவிளக்குகள் உடனுக்குடன் பழுது பார்க்கப்பட வேண்டும் எனவும் கலெக்டர் சுட்டிக் காட்டினார்.
திடக்கழிவு மேலாண்மைக்காக வழங்கப்பட்ட டிராக்டர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார். இவை உரிய ஊராட்சிகளில் பயன்படாததைக் கண்டித்த கலெக்டர், உடனடியாக அவை தேவைப்படும் பகுதிகளுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், சுகாதார நடவடிக்கைகள் பேணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அனைத்து திட்டப் பணிகளும் நேரத்தோடு தாமதமின்றி முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அவரது முக்கியமான ஆலோசனை என கூறப்பட்டது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகா, ராமசந்திரன், மண்டல துணை அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஆலோசனைகளில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக