பாலக்கோடு, ஏப்ரல் 30:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே திம்மேகவுண்டன் மடுவு ஆற்றில் குளிக்கச் சென்ற கட்டிட மேஸ்திரி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர், மாரண்டஅள்ளி அருகே உள்ள போயர்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 42). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தவர். மனைவி சிவசக்தி, மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகனுடன் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
நேற்று மதியம், சிவக்குமார் திம்மேகவுண்டன் மடுவு ஆற்றில் குளிக்கச் சென்றபோது திடீரென ஆற்றின் வேகத்தில் மூழ்கி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அருகிலுள்ள மக்கள் விரைந்து வந்து முயன்றும் அவரை மீட்க முடியவில்லை. தகவலறிந்த பாலக்கோடு தீயணைப்பு துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டும், இரவு நேரம் காரணமாக தேடுதல் நிறுத்தப்பட்டது. இன்றைய காலை மீட்புப் பணியை மீண்டும் தொடங்கிய தீயணைப்பு வீரர்கள், காலை 10 மணியளவில் சிவக்குமாரின் உடலை கண்டுபிடித்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தைப் பாதித்த இந்த துயர சம்பவம், அந்த பகுதியில் துயரமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக