மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம், தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு வட்டத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாம் 2025 மார்ச் 26 அன்று காலை 9.00 மணி முதல் மார்ச் 27 காலை 9.00 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு, வருவாய் வட்டங்களில் அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
26.03.2025 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முதன்மை அலுவலர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இதனை தொடர்ந்து, மாலை 3.30 மணிக்கு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படும். அரசு திட்டங்களை மக்களுக்கு நேரடியாக வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், முகாம் நடைபெறும் நாளில் பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட நான்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற உள்ளது. பொது மக்கள் தங்களது பட்டா மாற்றம் தொடர்பான கோரிக்கைகளை அளித்து உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் அரசு வழங்கும் இச்சிறப்பான வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்கள் குறைகளை உரிய முறையில் தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக