தமிழ்நாடு ஈரநில மறுசீரமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த தேசிய பயிலரங்கு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

தமிழ்நாடு ஈரநில மறுசீரமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த தேசிய பயிலரங்கு.


பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தர்மபுரி, தமிழ்நாடு ஈரநிலங்கள் பணி அமைப்பு மற்றும் புவியியல் துறையின் கக்கன் நற்பணி மன்றம் இணைந்து "அறிவியல் முறையில் தமிழ்நாடு ஈரநில மறுசீரமைப்பு நடவடிக்கைகள்" குறித்த தேசிய அளவிலான பயிலரங்கை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இந்நிகழ்வு ஈரநிலங்களின் பராமரிப்பு, பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் இடைத்துறை கூட்டுழைப்பின் தேவை குறித்து விவாதங்களை முன்வைத்தது.


புவியியல் துறைப் பேராசிரியர் முனைவர் நந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையில், "ஈரநிலங்களின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் அவற்றை அறிவியல் சார்ந்த முறையில் மறுசீரமைப்பதில் ஆராய்ச்சியின் பங்கு" குறித்து வலியுறுத்தினார். தமிழ்நாடு ஈரநிலங்கள் மற்றும் வனத்துறை சார்பில் முனைவர் மணிகண்டன், தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் சார்பில் திரு. திருமலைவாசன் ஆகியோர் சிறப்புரைகள் நிகழ்த்தினர். மேலும், கக்கன் நற்பணி மன்றம் சார்பில் திரு. கபில்தேவ் மற்றும் திரு. பாவல்ராஜ் கமலக்கண்ணன் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.


முனைவர் வித்யாசாகர் அருண் பாரதி தலைமையிலான ஆராய்ச்சி மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்ற இந்தப் பயிலரங்கில், ஈரநிலங்களின் நிலையான மேலாண்மை, நீர்வளப் பாதுகாப்பு, மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான தகவமைப்பு உத்திகள் குறித்து விரிவான ஆய்வு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில், பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


இத்தகைய பயிலரங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்ற சவால்களை சமாளிப்பதற்கான நடைமுறைத் தீர்வுகளை வடிவமைப்பதில் கல்வியமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad