திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு மேற்கு மாவட்ட நிர்வாகியா? – கட்சி தொண்டர்கள் அதிருப்தி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவிக்கு மேற்கு மாவட்ட நிர்வாகியா? – கட்சி தொண்டர்கள் அதிருப்தி.


தர்மபுரி மாவட்டத்தில் திமுக கட்சி இரண்டு பகுதிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. மேற்கு மாவட்டத்தில் தர்மபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகியவை உள்ளடங்கும். கிழக்கு மாவட்டத்தில் தர்மபுரி மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கும்.


மேற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இதே மாவட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு தொகுதியை சேர்ந்த காரிமங்கலம், அடிலம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆ.மணி, கடந்த காலங்களில் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர். தற்போது, மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக செயல்பட்டு வந்த அவருக்கு திடீரென தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


இந்த முடிவு, கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பல முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, இந்த பகுதியில் கழக வளர்ச்சிக்காக பணியாற்றிய பல முக்கிய நிர்வாகிகள் இருந்தபோதிலும், மேற்கு மாவட்டத்தில் பதவியில் இருந்த ஒருவருக்கு, திடீரென கிழக்கு மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டது சரியானது அல்ல என்று கட்சி தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.


திமுகவுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) மற்றும் அதிமுக ஆகியவை வலுவாக செயல்பட்டு வரும் தர்மபுரி மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளில், இடத்தை நிலைநிறுத்த கட்சி தலைமையினர் வலுவான செயல்திறன் கொண்ட ஒருவரை பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


தற்போது மாவட்டத்திற்குள் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, தேர்தல் நேரத்தில் கட்சிக்கு பாதிப்பு விளைவிக்கக்கூடும் என்ற அச்சம் தொண்டர்கள் மத்தியில் உள்ளது. தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த அனுபவமும், திறமையும் கொண்ட ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதே நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. கட்சி தலைமை இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு, மாற்றம் செய்வார்களா என்பது கவனிக்க வேண்டியதாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad