தருமபுரியில் திமுகவில் உட்கட்சி மோதல் – அமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அதிருப்தி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

தருமபுரியில் திமுகவில் உட்கட்சி மோதல் – அமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அதிருப்தி.


தருமபுரி, மார்ச் 25: தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது உதவியாளர் தேவ் ஆனந்த் மீது சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகள் செய்யப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திமுக நிர்வாகிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.


மாவட்டத்தில் திமுகவில் உட்கட்சி மோதல் தொடர்ந்து எழுந்து வருகிறது. நான்கு ஆண்டுகளாக அமைச்சர் பொறுப்பில் இருந்தபோதும் மாவட்டத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உரிய தொடர்பு இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், கட்சியினரிடையே எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கும் அவரது உதவியாளருக்கும் எதிராக எதிர்ப்பு உருவாகி, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் வெளிப்பட்டன.


சமூக வலைதளங்களில் "கடலூர் பன்னீர் – ஊழலுக்கு, கமிஷன் வசூலுக்கு அமைச்சரின் உதவியாளர் தேவ் ஆனந்த், வசூல் செய்ய கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு அமைப்பாளர் கௌதம்" என பதிவுகள் பகிரப்பட்டதை தொடர்ந்து, இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.


இதனையடுத்து, கிழக்கு மாவட்ட விவசாய பிரிவு துணை அமைப்பாளர் துரைராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் எவரெஸ்ட் மாதையன் உள்ளிட்டோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.


இச்சம்பவம், திமுக கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதலை வெளிப்படுத்தியுள்ளதோடு, அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. "மாவட்ட வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நிர்வாகிகளை மதிக்காமல் செயல்படும் அமைச்சர் மற்றும் அவரது உதவியாளரை மாற்ற வேண்டும்" என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad