தர்மபுரி டேகிஸ்பேட்டையைச் சேர்ந்த சரவணா என்ற பெண்ணும் அவரது குடும்பத்தினரும் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அவர்கள் நடத்தும் நிதி நிறுவனத்தில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பர்கத் அலி என்பவர் பல சீட்டு குழுக்களில் சேர்ந்து பணம் கட்டியதாகவும், அதற்கு மோசடி செய்ததாகவும் ஏற்கனவே கடந்த 24-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பது: நாங்கள் நடத்தும் நிதி நிறுவனத்தில் பர்கத் அலி ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம் என்று பல சீட்டு குழுக்களில் சேர்ந்தார். மொத்தம் ரூ.26 லட்சம் பணம் கட்டினார். அதை என் கணவரிடம் கொடுத்து, மாதம் தோறும் ரூ.78 ஆயிரம் வட்டியாக வாங்கினார். பின்னர், "வட்டி கொடுக்க முடியாது, உங்கள் பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னோம். ஆனால், அவர் என் கணவரை மிரட்டி, 2020 வரை ரூ.30 லட்சம் வட்டியாக பெற்றார். அதே ஆண்டு, அவர் கொடுத்த ரூ.26 லட்சம் அசல் பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டோம்.
ஆனாலும், அவர் எங்களுக்கு எந்த ரசீதும் கொடுக்காமல், மீண்டும் மீண்டும் மிரட்டி மேலும் ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டார். இதுவரை மொத்தம் ரூ.86 லட்சம் பெற்று, இப்போதும் என்னையும் என் மகனையும் மிரட்டி, "ரூ.80 லட்சம் சீட்டு பணம் கொடுங்கள்" என்று கேட்கிறார். தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால், எங்களையும் எங்கள் வக்கீலையும் மிரட்டுகிறார். இதனால், எங்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பணம் பெற்று மிரட்டும் இந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக