தர்மபுரி, மார்ச் 26, – தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், ஐ.ஏ.எஸ்., அவர்கள், பாலக்கோடு தாலுகாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் உணவகங்கள், மளிகைக் கடைகள், சிறு கடைகள், தர்பூசணி விற்பனை இடங்கள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்தும் அறிக்கை தரவும் பணித்தார்.
இதன்படி, தர்மபுரி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் மருத்துவர் ஏ. பானுசுஜாதா, எம்.பி., பி.எஸ்., தலைமையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், திருப்பதி, அருண் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது. புலிகரை, வெள்ளிச்சந்தை, பெங்களூர் நியூ ஹைவே, பாலக்கோடு தக்காளி சந்தை, தர்மபுரி ரோடு, பாப்பாரப்பட்டி பிரிவு சாலை, எம்.ஜி. ரோடு, புறவழிச் சாலை மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மளிகைக் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், சிறு கடைகள், தேநீர் கடைகளை சோதித்தனர்.
இந்த ஆய்வில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பொட்டலமிடப்பட்ட உணவு, திண்பண்டங்கள், குளிர்பானங்களில் காலாவதி தேதி, தேநீர் தரம், உணவுப் பொருட்களின் தரம், சமையல் எண்ணெய் பயன்பாடு ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. செய்தித்தாள்களில் எண்ணெய் பலகாரம் கொடுப்பது, பொட்டலமிடுவது, காட்சிப்படுத்துவது போன்றவற்றை தவிர்க்கவும், உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சாலையோரம் விற்கப்படும் தர்பூசணி பழங்களை சோதித்ததில், செயற்கை நிறமூட்டி அல்லது இனிப்பு கரைசல் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், 10-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்து, 2 கடைகளில் பூஞ்சை பாதித்த 30 கிலோ தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
பாலக்கோடு பேருந்து நிலையத்தில் 2 பீடா கடைகளில், விபரங்கள் அச்சிடப்படாத பேரிச்சம்பழம், நிப்பட், பிஸ்கட், மிக்சர், காராபூந்தி பாக்கெட்டுகள் மற்றும் காலாவதியான மிக்சர் பாக்கெட்டுகள் சுமார் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதற்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டது.
புலிகரையில் ஒரு உணவகத்தில் காலாவதியான மசாலா பொருட்கள் மற்றும் பேப்பர் வாழை இலை பறிமுதல் செய்யப்பட்டன. பேகாரள்ளி செல்லும் சாலையில் டாஸ்மார்க் கடை அருகே 2 துரித உணவு இறைச்சி கடைகளில், குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பழைய இறைச்சி, பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய், செயற்கை நிறமூட்டி, நெகிழி கவர்கள், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த 3 கடைகளுக்கும் தலா ரூ.1000 அபராதம் (மொத்தம் ரூ.3000) விதிக்கப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் மற்றும் உணவு பாதுகாப்பு பதிவு பெற வழிமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக