தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் தாகம் தணிக்க தர்பூசணி பழங்களை அதிகம் வாங்கி வருகின்றனர். இதனிடையே, பழங்களில் செயற்கை நிறமூட்டம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஷ், ஐ.ஏ.எஸ்., அவர்களின் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மருத்துவர் ஏ.பானுசுஜாதா தலைமையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி, சரண்குமார், அருண், திருப்பதி உள்ளிட்ட குழுவினர் தர்மபுரி சந்தை பேட்டை, பேருந்து நிலையம், எர்ரப்பட்டி, தேவரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த மற்றும் சில்லறை பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது தரம் குறைந்த, பூஞ்சை தாக்கம் கொண்ட, அழுகிய நிலையில் இருந்த பழங்கள் 2,000 கிலோ அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக,
- தர்மபுரி சந்தை பகுதியில் நகராட்சி பள்ளி அருகே இருந்த 3 கடைகளில் 500 கிலோ பழங்கள்
- எர்ரப்பட்டி பகுதியில் 1,200 கிலோ பழங்கள்
- தேவரசம்பட்டி பேருந்து நிலையம் எதிரே 300 கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், சுகாதாரம் பின்பற்றப்படாத கடைகளில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய், காலாவதியான மசாலா பொருட்கள் உள்ளிட்டன கண்டுபிடிக்கப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், பொதுமக்கள் சந்தேகப்படும் பழங்களில் செயற்கை நிறமூட்டம் உள்ளதா என்பதை அறிய வீட்டு முறையில் பரிசோதனை செய்யும் முறைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கினர். ஆய்வின் முடிவில், தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட எந்த கடையிலும் செயற்கை நிறமூட்டம் கண்டறியப்படவில்லை.
தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையின் ஆய்வுகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக