தொப்பையாறு ஆற்றில், திறந்து விடபட்ட தண்ணீரால், தரைபாலம் அடித்து செல்லப்பட்ட இடத்தில் உயர்மட்ட பாலம் மற்றும் கயிறு கட்டி ஆற்றை கடக்கும் இடத்தில் தரைபாலம் அமைக்ககோரி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லம்பள்ளி அடுத்த, தொப்பையாறு ஆற்றங்கரையோரம் விநாயகபுரம், காட்டுவலவு, கஸ்தூரிகோம்பை மற்றும் பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில், உள்ள கிராமங்களில், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் தொப்பையாறு அணை தனது முழு கொள்ளவை எட்டிய நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 2,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், விநாயகபுரம் கிராமத்திற்கு செல்ல அமைக்கபட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும், வெள்ளாரில் வழியாக கஸ்தூரி கோம்பைக்கு செல்லும் சாலையில் இருந்த தரை பாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், விநாயகபுரம், காட்டுவலவு, கஸ்தூரிகோம்பை, பாப்பம்பட்டி, கோம்பை காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சுமார் 8 கிமீ வரை சுற்றிசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தொப்பையாறு ஆற்றின் குறுக்கே, விநாயகபுரம், வெள்ளார், பாப்பம்பட்டி ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்மம்பட்டி அடுத்த சேவியூர்கொட்டாய் பகுதியில், வசிக்கும் மக்கள் சாலை வசதி இல்லாததால், கருங்கல்பாளையம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த சாலையில் தொப்பையாறு குறுக்கே பாய்வதால் ஆற்றை கடக்க ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி பெரியவர்கள் மட்டும் கடந்து செல்கின்றனர். எனவே, சேவியூர் கொட்டாய் பகுதியில் தரைபாலம் அமைத்து கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.