மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.12.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காணவும், அரசு இயந்திரம் களத்திற்கே வரும் வகையிலும், பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், அரசின் பல்வேறு திட்டங்கள் / திட்டங்கள் / பணிகளை விரைவுபடுத்துவும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள்.
இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 டிசம்பர் மாதத்திற்கான "உங்களைத் தேடி, உங்கள் ஊரில" திட்ட முகாம் பென்னாகரம் வட்டத்தில் இன்று முதல் நாளை (19.12.2024) காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இத்திட்ட முகாமில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எலுமல்மந்தை கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நடமாடும் நேரடி ராகி கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம் ராகி தரம் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும், எலுமல்மந்தை கிராமத்தில் விவசாயி நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வரப்பினையும், எலுமல்மந்தை கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், எலுமல்மந்தை கிராமத்தில் உள்ள தூய்மை பனியாளர்களின் கோரிக்கைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து கேட்டறிந்ததோடு, பென்னாகரம் வட்டம், மறுகாரம்பட்டி கிராமத்தில் தோட்டகலைத்துறையின் மூலம் அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள விவசாயியின் மிளகாய் தோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், குழிப்பட்டி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார்கள். மேலும், பொதுமக்களுக்கு பயன்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் கட்டிமுடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு, சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்து கருத்துக்களை பெற்றார். ஆய்வினை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், காரல் மார்க்ஸ் திருமண மண்டபதில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த மதிப்பாய்வின் போது, வருகைதந்த அலுவலர்கள் களத்தின் சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் பதிவு முகாமை பார்வையிட்டு, நேரிடையாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான பயனாளிகளுக்கு சென்று அடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வடகிழக்கு பருவமழையையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, உரிய அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் 48 பயனாளிக்கு ரூ.22.56 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைபட்டா, இ-பட்டாக்கள் உள்ள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார். இதனை தொடர்ந்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் பென்னாகரம் வட்டம், மாங்கரையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், செயல்பட்டு வரும் அரசு மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டு, மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவிகளிடம் கேட்டறிந்தார்கள்.
மேலும், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய அறிவுரை வழங்கவுள்ளார்கள். இந்நிகழ்வுகளின் போது தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆர்.காயத்ரி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திருமதி.லலிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், பென்னாகரம் வட்டாட்சியர் திருமதி.லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுருளிநாதன், திருமதி.ஷகிலா மற்றும் மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உள்ளனர்.

