அரசாணை எண்.177 கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்துறை மீன்5) நாள்.13.09.2017 – ன் படி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளாக உள்ள பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை தருமபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மற்றும் தருமபுரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதரார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையத்தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி விவரங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தருமபுரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 05.11.2024 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொலைபேசி வாயிலோ (தொலைபேசி எண்: 04342-232311) அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பயன்றெலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அலுவலக முகவரி: உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 1/165ஏ, இராமசாமி கவுண்டர் தெரு, கலக்ட்ரேட் அஞ்சல், ஒட்டப்பட்டி, தருமபுரி –636705. கைப்பேசி எண் - 9384824260 இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.