தீபாவளிப் பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமலும், பாதுகாப்பாகவும் கொண்டாட தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள் பண்டிகை காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைகளைப் பின்பற்றி பட்டாசு வெடிப்பது குறித்து உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் இந்த ஒலியானது, தற்காலிக செவிட்டுத்தன்மையையும், தொடர் அதி ஒலியானது நிரந்தர செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளது. மேலும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகையானது சுற்றுச்சூழலையும், வளிமண்டலத்தையும் பாதிக்கும் தன்மையுடையது. எனவே, தீபாவளிப் பண்டிகையை பாதுகாப்பாகவும், விபத்தின்றியும் கொண்டாடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- மாண்புமிகு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் மற்றும் மாலை 07.00 மணி முதல் 08.00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட காலம் கடந்து கண்டிப்பாக பட்டாசு வெடிக்கக் கூடாது.
- ஒலியின் அளவு 125 டெசிபல் மற்றும் அதற்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய ஹைட்ரஜன் பாம், புல்லட் பாம் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
- மாண்புமிகு உச்சநீதிமன்ற விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வாங்கக்கூடாது.
- பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
- பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தை விளைவிக்கும், ஆகவே பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது.
- பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கை பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே இவ்வாறு செய்யக்கூடாது.
- குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.
- எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது மற்றும் ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.
- பட்டாசு வகைகளை சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக்கூடாது.
- பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதைவிட நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கலாம்.
- கால்நடைகள் அருகில் பட்டாசுகளை வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்பொழுது இருசக்கர வாகனங்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முடடி விபத்துக்கள் நேரிடலாம், அதை தவிர்க்க வேண்டும்.
- பட்டாசுகளை கையில் பிடித்துக்கொண்டு வெடிக்க கூடாது.
- குழந்தைகளை தனியே பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. பெரியவர்கள் உடனிருந்து பாதுகாப்பாக வெடிக்க அனுமதிக்க வேண்டும்.
- தண்ணீர் நிரம்பிய வாளியை அருகில் வைத்திருக்க வேண்டும். கம்பி மத்தாப்பு போன்ற பட்டாசுகளை வெடித்த பின்னர், பாதுகாப்பாக இந்த வாளியில் போட வேண்டும்.
- தீக்காயம் ஏற்படும் நேர்வில் உடனடியாக காயத்தின் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும். (சுமார் 5 நிமிடங்கள்) பின்னர் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
- குப்பைதொட்டி போன்ற கழிவுகள் அருகில் வெடிக்க கூடாது. இதன் காரணமாக தீ விபத்து நேரிடலாம். பட்டாசு வெடிப்பதால் பல்வேறு தீங்குகள் நேரிடுகின்றன.
- தீக்காயம் ஏற்படவும், இதனால் நிரந்தர ஊனம் / உயிரிழப்பு / நிரந்தர வடுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- குழந்தைகள் / நோயாளிகள் / வயது முதிர்ந்தவர்கள் ஆகியோருக்கு பய உணர்ச்சி / மன அழுத்தம் ஏற்பட்டு, அதனால் மயக்கம் / மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- பட்டாசு வெடிப்பதனால் உருவாகும் புகை காரணமாக மூச்சுத் தினறல்/ சுவாசக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- புகையானது சுற்றுச்சூழலையும், காற்று மண்டலத்தையும் மாசுபடுத்துவதுடன் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைய நீண்டகாலம் ஆகும்.
எனவே, பொது மக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தேவையான அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு, அதிக ஒலி ஏற்படுத்தும் வெடியால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டும் தீபாவளி பண்டிகையினை பாதுகாப்பாக கொண்டாடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பட்டாசுகளால் தீவிபத்துக்கள் ஏதேனும் நேரிட்டாலோ விதிமீறல்கள் குறித்தோ அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077, 108, 18004257016, 18004251071, 8903891077, ஆகியவற்றிற்கும் புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.