தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று (23.08.2024) துவக்கி வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: சிறு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய மாத்திரை குடற்புழு நீக்க மாத்திரை ஆகும். காரணம், குழந்தைகள் உண்ணுகின்ற உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு முழுமையாக கிடைப்பதற்கு குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்காக இம்மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
இதனை குழந்தைகள் அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொண்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திட முன்வர வேண்டும். மேலும், குடற்புழு நீக்க மருந்து / மாத்திரைகள் (அல்பெண்டசோல்) குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகையை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
1-வயது முதல் 19-வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் (ITI, பாலிடெக்னிக் ) உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட்டு வருகின்றது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 30.08.2024 அன்று நடைபெற உள்ளது. விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை தவறாமல் வழங்கப்படும்.
இப்பணிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினருடன் பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, உயர் கல்வி துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 4.12 இலட்சம் குழந்தைகளுக்கும் மற்றும் 20-வயது முதல் 30-வயது வரை உள்ள 1.22 இலட்சம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதற்கு ஊக்குவிக்கவும், குடற்புழு நீக்க மாத்திரையின் பயன், வழங்கப்படும் நாள் குறித்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி தருமபுரி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க திட்டம் சிறப்பாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கவும் தொடர்புடைய அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ஜெயந்தி, துணை ஆட்சியர்கள் (பயிற்சி) திருமதி.சௌந்தர்யா, செல்வி.கார்த்திகா, ஊராட்சி மன்ற தவைலர் திருமதி.மாரியம்மாள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

.jpg)