தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவ, மருத்துவ வளாகம், வட்டார மருத்துவ வளாகம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் 22.08.2024 அன்று நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்திற்குள் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்க நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பு அணுகலை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக காவலர்களை நியமித்து, கண்காணிப்பு பலத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துணை கோட்ட அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்தின் உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் உள்ள மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் சரிவர இயங்குகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். பார்க்கிங் பகுதிகள், நுழைவு வாயில் மற்றும் பார்வையாளர் பகுதிகளில் பாதுகாப்பை கடுமையாக்க வேண்டும். போதைப்பொருள் உபயோகம், மது அருந்துதல், சந்தேகத்திற்கிடமான மற்றும் தனிப்பட்ட நபர்கள் நடமாட்டம் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் தவிர்க்க முறையான கண்காணிப்பை பாதுகாப்பு போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதன்மை வாயில் மற்றும் அவசரநிலை ஆகியவற்றில் பாதுகாப்பு குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறங்களில் காவலர்கள் முறையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். புறநோயளிகள் பிரிவில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை முறையாக பரிசோதிப்பதை SDO-க்கள் கண்காணிக்க வேண்டும்.
மேலும், பேருந்து நிலையங்களிலும் மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் சரிவர இயங்குகிறதா எனவும், பகல் மற்றும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்பாடுகள் ஏற்பாடா வண்ணம் கூடுதலாக மற்றும் சுழற்சி முறையில் காவலர்கள் கண்காணிப்பை பணியினை மேற்கொள்வதையும் காவல்துறை உயர் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.மகேஸ்வரன், மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.அமுதவல்லி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.சாந்தி, உள்ளிருப்பு மருத்துவர் மரு.நாகேந்திரன், அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

.jpg)