ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. வெள்ள பெருக்கின் போது அதிக அளவில் தண்ணீர் சென்றதால் நடைபாதை, மெயின் அருவி சினி ஃபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பி வேலிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் தொங்கும் பாலத்திற்கு செல்லக்கூடிய இரும்பு படிக்கட்டும் சேதம் அடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. எனவே சேதங்களை சீரமைக்கும் பணி நிறைவடையும் வரை அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் இருப்பதால் தினம் தோறும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வருகின்றனர். நேற்று கூட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தால் இது போன்ற உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது.
ஆற்றில் நீர் வரத்து குறைந்து, சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்று அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படும் வரை பாதுகாப்பு பணியில் காவல்துறையினரை ஈடுபடுத்தப்பட்டு , இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையென்றால் மேலும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

