தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை, கோட்டப்பட்டி தரப்பு, ஆவாலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் 188 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை, கோட்டப்பட்டி தரப்பு, ஆவலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் 188 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (14.08.2024) வழங்கினார்.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 139 பயனாளிகளுக்கு ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.2.53 இலட்சம் மதிப்பீட்டில் திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகைகளையும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நல வாரிய அட்டைகளையும், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு ரூ.1.05 இலட்சம் மதிப்பீட்டில் துவரை பரப்பு விரவாக்கம், துவரை நாற்றுநடவு செயல்விளக்கம் மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.1.15 இலட்சம் மதிப்பீட்டில் தக்காளி, தென்னைகன்றுகள் மாஞ்செடிகள் மற்றும் நுண்ணீர் பாசன கருவிகளையும், கூட்டுறவு துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு ரூ.9.70 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்கடன்களையும் என மொத்தம் 188 பயனாளிகளுக்கு 1 கோடியே 15 இலட்சம் (ரூ.1,14,49,726/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும், பொது மக்களுக்கும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாக நகரப்பகுதிக்கு இணையாக அரசின் சேவைகள், அடிப்படை வசதிகள் மலை கிராம மக்களுக்கு கிடைக்க முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், ஆவலூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்டத்தின் அனைத்துதுறை முதன்மை அலுவலர்களும் பங்கேற்கும் வகையில் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கோட்டப்பட்டி, ஆவாலூர், மங்கலபட்டி, சிலம்பை, சூரநத்தம், தெக்கானம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் சிரமங்களை போக்கும் வகையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகின்றது. இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் விளக்க கையேடுகள் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் தயாரித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மக்கள் தொடர்பு முகாம்களில் வழங்கப்படுகிறது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறைகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பெருமக்கள் கால்நடை வளர்ப்பு பணிகளில் ஈடுபடுவோர் அரசின் திட்டங்களை பெற்று, பயன்பெற வேண்டும்.
பின்தங்கிய வகுப்பை சாரந்தவர்கள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று, வேலைவாய்ப்பு பெறும் வகையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிக்க வைத்து, போட்டித்தேர்வுகள் எழுதி அரசு பணிக்கு செல்ல ஊக்க அளிக்க வேண்டும். உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பிள்ளைகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குகிறது. இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்தி மக்கள் நலமுடன் வாழ வேண்டும்.
இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையான தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களை இணைக்கும் வகையில் செலம்பை முதல் கண்ணூர் சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராய்ந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோட்டப்பட்டி முதல் சிட்லிங் வரை சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து அறிக்கை பெற்று, சாலைப்பணி விரைவில் மேற்கொள்ளப்படும்.
இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு முன்கூட்டியே மனுக்கள் பெறுவது தொடர்பாக இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு செய்யப்பட்டு, வருவாய்துறை மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள் முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்றைய தினம் 188 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்கள் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அரசு மக்களின் உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, அரூர் வட்டம், மொண்டுகுழி நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விநியோகிக்கப்பட்டு வரும் அத்தியாவசியப் பொருட்களை பரிசோதித்து, அதன் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், கோட்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள், ஆய்வகங்களை ஆய்வு செய்து, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, அரூர் வட்டம், கோட்டப்பட்டியில் வனத்துறையின் நாற்றுப்பண்ணையினையும், கோட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார கட்டத்தினையும், மருந்தகத்தினையும் மற்றும் கோட்டப்பட்டியில் பிரதமமந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ், கட்டப்பட்டுள்ள வீடு கட்டுமான பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் அரூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார், வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, நில அளவைத்துறை உதவி இயக்குநர் திரு.செந்தில்குமார், உதவி ஆணையர் (கலால்) திருமதி.நர்மதா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செம்மலை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திருமதி.பாத்திமா, பழங்குடியினர் நல அலுவலர் திரு.கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, வட்டாட்சியர் திரு.ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.இளங்குமரன், வனத்துறை, சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

.jpg)