தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒட்டியுள்ள வனப்பகுதியில் சிலர் சட்ட விரோதமாக வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு வனச்சரகர் நடராஜன், வனவர் கதிரவன், வனக்காப்பாளர் கள் தினேஷ், முருகன், கிருஷ்ணவேணி ஆகியோர், பிக்கன அள்ளிகாப்புக்காடான தேன்கல்மலைக்கொட்டாய் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சிலர் காட்டு பன்றியை வேட்டையாடி இறைச் சியை பங்கு பிரித்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் கதிரம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 33,) ரவி (35), மணிகண்டன் (39), செல்வராஜ் (45) என்பதும், கன்னி வலை வைத்து காட்டு பன்றியை வேட்டையாடியதும் தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்தகாட்டு பன்றி இறைச்சி மற்றும் வேட்டையாட பயன்படுத்திய வலை, கம்பிகளை பறிமுதல் செய்ததுடன், அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் என ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

