மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்"; திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (28.08.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக்கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், அரசின் பல்வேறு திட்டங்கள் / திட்டங்கள் / பணிகளை விரைவுபடுத்துவதற்கான திட்டமாகும்.
இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் காரிமங்கலம் வட்டத்தில் இன்று (28.08.2024) காலை 09.00 மணி முதல் நாளை (29.08.2024) காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. இத்திட்ட முகாமில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் இன்று (28.08.2024) தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியானஅள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்து, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் பார்வையிட்டு, பொதுமக்கள் கோரிக்கைகள் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் ஆய்வாளருக்கு அறிவுறுத்தினார்.
கெரகோடஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயல்பாடுகள் மற்றும் அங்கு செயல்பட்டு வரும் இ -சேவை மைய செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் கெரகோடஅள்ளி அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளையும் அதற்காக கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் தரத்தினையும் நேரடியாக ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு சரிவிகித மற்றும் சத்தான உணவு சீரான விகிதத்தில் வழங்க வேண்டும் என அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, காரிமங்கலம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு தயாரித்து வழகும் உணவு கூடம் மற்றும் குடிநீர் வசதிகள், மின்சார வசதி, கழிப்பறை வசதிகளை நேரடியாக ஆய்வு செய்து மாணவர்களுக்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவுகளை தயார் செய்து வழங்கிட அறிவுறுத்தினார்.மேலும், காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, பேரூராட்சி நிதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
காரிமங்கலம், வண்ணான் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு அங்கு குடிசை வீட்டில் தங்கி உள்ள 5 குடும்பத்தினரிடம் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற முறைப்படி தங்களுக்கு அறிவிப்பு வழங்கியவுடன், தாங்கள் உரிய காலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தி, அரசின் சார்பில் வேறு இடத்தில் விலையில்லா வீட்டுமனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். காரிமங்கலம் அரசு சமுதாய உடல் நல மையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, பிரசவ பிரிவு, அவசர விபத்து பிரிவுகளை ஆய்வு செய்து, மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகளை அளித்திட வேண்டுமெனவும், மருத்துவமனையை சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரித்து மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
மேலும், குண்டல்பட்டியில் உள்ள மனநல மறுவாழ்வு மையத்தினையும் ஆய்வு செய்தார். காரிமங்கலம் வட்டம், முக்குளம் ஊராட்சி நியாய விலை கடையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், முக்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் முக்குளம் ஊராட்சியை சேர்ந்த திரு.வரதராஜ் என்பவர் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தன்னுடைய 50 சென்ட் நிலத்தில் ரூபாய் 60 ஆயிரம் அரசு மானியத்துடன் ரூபாய் 1 இலட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில், சுரைக்காய் நிரந்தர கல்பந்தல் அமைத்து சாகுபடி செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து உற்பத்தி, விற்பனை மற்றும் வருவாய் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.
மேலும், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ஆலமரத்துப்பட்டி ஏரி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் (2024-25) கீழ் ரூபாய் 3 இலட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாக விரைவாகவும் முடித்து எதிர்வரும் மழைக்காலத்தில் மழை நீரை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும் என ஒப்பந்ததாரர் மற்றும் வட்டார வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு, சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்து கருத்துக்களை பெற்றார். ஆய்வினை தொடர்ந்து, காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த மதிப்பாய்வின் போது, வருகைதந்த அலுவலர்கள் களத்தின் சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் பதிவு முகாமை பார்வையிட்டு, நேரிடையாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜிட்டாண்டஅள்ளி ஊராட்சி, மதகேரிபோடாங்கல் தேனருவி கிராமத்தில் வசிக்கும் 11 இருளர் இன பயனாளிகளுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி அடையாள அட்டைகளையும், 29 பயனாளிகளுக்கு ரூபாய் 29 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுனை பட்டாக்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் காரிமங்கலம் வட்டார வணிக வள மையம் சார்பில் 10 மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு தலா ரூபாய் 30 ஆயிரம் வீதம் ரூபாய் 3 இலட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விவசாய பண்ணை தொகுப்பு திட்டத்தின் கீழ் 5 பயனாளிக்கு ரூபாய் 1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவிகள் என மொத்தம் 55 பயனாளிக்கு ரூபாய் 33 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
பின்னர், கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, பேரூராட்சியின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். மேலும், கம்பைநல்லூர் பேரூராட்சி செல்லியம்மன் நகரில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூபாய் 22 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாக விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, காரிமங்கலம் வட்டம், கொங்கரப்பட்டி ஊராட்சி, கூடுதுறைபட்டி கிராமம், இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் ஊராட்சியின் அடிப்படை தேவைகள் குறித்து இருளர் இன பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி, உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பிள்ளைகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்குவதோடு, மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்களை தெரிந்துகொண்டு, விண்ணப்பித்து, பயன்பெற்று நலமுடன் வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
மேலும், மாலையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, உரிய அறிவுரை வழங்கவுள்ளார்கள். இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்வரன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.சௌந்தர்யா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. சாந்தி, துணை இயக்குநர் (மருத்துவம்) மரு.ஜெயந்தி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கணேசன், உதவி ஆணையர் (கலால்) திருமதி.நர்மதா, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு.குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொ) திருமதி.மலர்விழி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திருமதி.பாத்திமா, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் திருமதி.பானுசுஜாதா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.செம்மலை, பழங்குடியினர் நல அலுவலர் திரு.கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருமதி.ரமாலி ராமலட்சுமி, திரு.மனோகரன், காரிமங்கலம் வட்டாட்சியர் திரு.கோவிந்தராஜ், தனி வட்டாட்சியர் திரு.சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.நீலமேகம், துணை வட்டாட்சியர் திரு.பாலா, இளநிலை பொறியாளர் திரு.பழனி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் திருமதி.ஆயிஷா, திரு.ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்றத்தலைவர் திரு.தீர்த்தகிரி மற்றும் மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் உள்ளனர்.

%20%5Bphotoutils.com%5D.jpg)