தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த சீங்கேரி கூட்ரோடு அருகே உள்ள கடையில் சட்டவிரோதமாக கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து, பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதாக சுகாதாரம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாந்திக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து இணை இயக்குநர் டாக்டர்.சாந்தி, மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவிணர் சீங்கேரி கூட்ரோடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சாலையோரம் இருந்த கடையில் உள்ள அறைக்கு கர்ப்பிணி பெண்கள் செல்வதை கண்காணித்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது 4 பேர் கொண்ட குழுவிணர் கர்ப்பிணிகள் வயிற்றில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்தது தெரிய வந்தது, இவர்களை கண்டதும் இருவர் தப்பி ஓடி தலைமறைவாகினார்.
மற்ற இருவரை பிடித்து விசாரித்ததில் தர்மபுரி இலக்கியம் பட்டியை சேர்ந்த கற்பகம் (வயது.39) வெண்ணாம்பட்டியை சேர்ந்த வடிவேல் (வயது.40), என்பதும் தப்பியோடியவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திருமலை (வயது.40) ஜோதி (வயது .37) என்பதும் தெரிய வந்தது, அவர்களிடமிருந்த ஸ்கேன் செய்யும் கருவி, மருந்துகள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்து இருவரையும், மகேந்திர மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மகேந்திர மங்கலம் போலீசார் இருவரையும் கைது செய்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவானர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

