கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இதன் காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சார் ஆகிய இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் கபினி கிருஷ்ணராஜ் சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 86 ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 74 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் என காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே ஒகேனக்களுக்கு நாளை காலை நேரத்திற்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 7 நாளாக நீடிக்கிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

