தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், எர்ரணஹள்ளி ஊராட்சியில் உள்ள ரெட்டியூர், வி.செட்டிஏரிபள்ளம் பகுதிகளில் சுமார் 300வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது கடுமையான கோடை வெயில் தாக்கத்தால் இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் முழுமையாக வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விலங்குகளுக்கும் வீடுகளுக்கும் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிராமமக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஒகேனக்கல் குடிநீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஓகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் ஆழ் துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வழங்க கோரி 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து ஊர் கவுண்டர் சாம்ராஜ் கூறியதாவது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் ரெட்டியூர் சமத்துவபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஆழ்துளை கிணறு அமைக்கவும், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக் விடுத்துள்ளார்.