தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டம் மற்றும் அரசின் சேவைகள் மக்களை சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று கேட்டறிந்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல்வரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளை தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் புதுமை திட்டமான "நீங்கள் நலமா" என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டம் மற்றும் அரசின் சேவைகள் மக்களை சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.03.2024) கேட்டறிந்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் மீதான கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையைக் காட்டும் விதமாகவும், மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு சேர்வதை உறுதி செய்வதற்காகவும் முதல்வரின் முகவரி துறையின் கீழ், "நீங்கள் நலமா" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை தொடங்கி வைத்து, ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்கள். அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் மக்களை சென்றடைவது குறித்து கேட்டறிந்தார்கள். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நில அளவை கோரி மனு செய்திருந்த அதியமான் கோட்டை ஊராட்சியை சேர்ந்த திருமதி.அகினா மற்றும் டொக்குபோதனஅள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கவிதா ஆகியோரின் மனுக்கள் மீதான நடவடிக்கை விவரம் குறித்து தொலைபேசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்கள்.
மேலும், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் சலவைப் பெட்டி மற்றும் மாற்றுத்திறனாளி உபகரணம் வேண்டி மனு வழங்கிய திருமதி.பவுனம்மாள் மற்றும் திரு.குப்புராஜ் ஆகியோரின் மனுக்களின் மீதும், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள ஆய்வில் பெறப்பட்ட திரு.மணிகண்டன் என்பவரின் கோரிக்கை மனு மீதான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட விவரம் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்கள். பின்னர், இணையவழி, மக்கள் தொடர்பு திட்ட முகாம் உள்ளிட்டவைகளில் பெறப்பட்ட மனுக்களின் மீதான நடவடிக்கை விவரம் குறித்து மனுதாரர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்கள்.