தருமபுரி மாவட்டத்தில் எதிர்வருகின்ற கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.03.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்·பராமரிப்பு இல்லாமல் இருக்கும் மின்மோட்டார்கள், குழாய்களை சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் ஏற்படும் சவால்களை சமாளிக்க நிரந்தர தீர்வு காண வேண்டுமெனவும், தண்ணீர் பிரச்சனைகளைப் பற்றி மக்கள் கூறும் குறைகளை உடனடி தீர்வு காண வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
மேலும், தமிழ்நாடு அரசின் உதவிகள் விளிம்பு நிலையில் வாழும் மக்கள், இருளர் மக்கள் வாழும் வாழ்விடங்களில் ஏற்படும் குடிதண்ணீர் பிரச்சனைகளுக்கு முன்னூரிமை அளித்து அதனை விரைந்து தீர்க்க வேண்டுமெனவும், ·ஏரியூர் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் இருப்பதால் அப்பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் தட்டுப்பட்டை களைவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்திட வேண்டுமெனவும், மண்டல அலுவலர்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நேரில் கள ஆய்வு செய்து குடிநீர் தட்டுப்பாடு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் சீரான குடிநீர் வழங்க வேண்டுமெனவும், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் TWAD அலுவலர்கள் இணைந்து ஆலோசனைக்கூட்டம் நடத்தி குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளை கண்டறிந்து, தட்டுப்பாட்டை போக்கி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும், ·குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் Hydro Fractional Unit மூலம் தீர்வு காணப்பட முடியுமா என்பதனை ஆராய்ந்து அதற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டுமெனவும், குடிநீர் திட்டப்பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார், இ.ஆ.ப., உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கணேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.மா.மணிவாசகம் உட்பட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.