தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளை உலக தொழுநோய் ஒழிப்பு தினமான இன்று (30.01.2024) முதல் 13.02.2024 வரை "களங்கம் தவிர்ப்போம்! கண்ணியம் காப்போம் !!" என்ற கருப்பொருளுடன் இருவார விழாவாக மாவட்ட முழுவதும் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஸ்பர்ஷ்“ தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (30.01.2024) கொடியசைத்து தொடங்கிவைத்தார்கள்.
இப்பேரணியில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி சேலம்-தருமபுரி பிரதான சாலை வழியாக அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரை சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து, தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் ஸ்பர்ஷ் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், தொழுநோய் ஒழிப்பு பணியில் அர்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், தோல் நோய் சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் நற்சான்றிதழ்களை வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் 30.01.2024 முதல் 13.02.2024 வரை நடைபெறும் இருவார நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொழுநோய் கண்டுபிடிப்பு பணிகள் நடைபெறுகிறது. மேலும் பள்ளிகளில் RBSK குழு மூலமும், கல்லூரிகளில் சுகாதார அலுவலர்கள் மூலமும், கிராமங்களில் நடமாடும் மருத்துவ குழு (MMU, MTM, HI, WHV, MLHP) மூலமும், தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் தொழிலாளர் நடமாடும் மருத்துவ குழு (LMMU) மூலமும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையில் கண்டறியவும், 2027- ஆம் ஆண்டிற்குள் தொழுநோய் இல்லா இந்தியா என்ற நிலையை அடையவும் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 63 தொழுநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 45 நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் கால்களில் உணர்ச்சி இழந்த நபர்கள், நோய் அதிகம் பாதித்த பழைய மற்றும் புதிய நோயாளிகள் என 300 நபர்களுக்கு MCR காலணிகள் வழங்கப்பட்டுள்ளது. கை, கால்களில் புண் ஏற்பட்ட 196 நபர்களுக்கு சுய பாதுகாப்பு பெட்டி (SCK) வழங்கப்பட்டுள்ளது. 312 தொழுநோயால் ஊனமுற்ற நபர்களுக்கு தொழுநோய் பராமரிப்பு உதவி தொகை மாதந்தொறும் ரூ.2000/- மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கண் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், சக்கர நாற்காலி, காட்டன் கை உறைகள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று குணமடைந்த நபர்கள் ஆரம்ப நிலை ஊனமாக இருந்தால் அறுவைச்சிகிச்சை மூலம் (RCS Operation) சரிசெய்து கொண்டால் ரூ.12000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிகழ்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ. பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநர் திருமதி.பிரியா, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் மரு.சாந்தி, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.இரா.புவனேஷ்வரி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ஜெயந்தி, துணை இயக்குநர் குடும்பநலம் மரு.பாரதி, துணை இயக்குநர் காசநோய் மரு.ராஜ்குமார், இந்திய மருத்துவ சங்க பிரதிநிதி மரு.இளங்கோவன், தோல் மருத்துவர்கள் மரு.பிரபாகரன் (தலைவர்), மரு.அகிலா, மரு.நரசிம்மன், அரசு துறை அலுவலர்கள், மருத்துவர்கள், ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.