Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட திட்டக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட திட்டக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.01.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திட்ட பணிகளை மேற்கொள்ளவும், நடைபெற்று வரும் திட்ட பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட திட்டக்குழுவின் பணிகளான மாவட்ட வளர்ச்சித் திட்டம் தயாரிப்பதற்காக மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனித வளம் சம்பந்தமான அனைத்து விவரங்களைச் சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்தல், வரைபடம் ஒன்றைத் தயாரித்து மாவட்டத்தின் வள ஆதார வாய்ப்புகளை மதிப்பிடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுதல், ஊரக மற்றும் நகர்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சார்புத் துறைகள் தயாரித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களைத் தொகுத்தல், மாநில அரசு வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு மாவட்ட திட்டக்குழு விவாத்தித்து மாவட்டம் முழுமைக்குமான வரைவு வளர்ச்சித் திட்டம் ஒன்றைத் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


ஊரக மற்றும் நகர்பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையில் பணிகள் மேற்கொள்ளப்படும் இடம் சார்ந்த திட்டமிடுதல் நீர் மற்றும் ஏனைய இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உட்பட பொதுவான நலன் பற்றி விவாதித்து ஒருங்கிணைந்து அடிப்படை வசதி வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழலை பேணிப்பாதுகாக்க உதவுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


மாவட்டத்தின் வளர்ச்சி வேகத்தைக்குறைக்கும் கூறுகளைக் கண்டறிதல் மற்றும் மாவட்டத்திற்கான குறிப்பிட்ட வளர்ச்சி உத்திகள், திட்டங்கள், செயல்திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குதல், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், பணிகள் செயலாக்கத்தை கண்காணித்து தொடர்புடைய அலுவலர்கள் ஆய்வு செய்து பணிகளை முறையாக கண்காணித்திட அறிவுறுத்தபட்டுள்ளது.


மாவட்ட திட்டக்குழுவானது, மூன்றடுக்கு ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் திட்டங்களை ஒன்றிணைத்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளூர் சுய அரசாங்கங்களின் சுயமான திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு விரிவான வரைவு மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும். மேலும், இந்த திட்டம் ஊராட்சிகளுக்கும் நகராட்சிகளுக்கும் இடையிலான இடஞ்சார்ந்த திட்டமிடல், நீர் மற்றும் பிற வளங்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பகிர்வது, உள்கட்டமைப்பின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுவான நலன்களை அடையாளப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் ரூ.32.13 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுற்றுசுவர் மற்றும் நுழைவுவாயிலினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்கள். இக்கூட்டத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி.எம்.யசோதா, ஆவின் பொது மேலாளர் திருமதி.மாலதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. சுவாமிநாதன், துணை இயக்குநர் சுகாதரப்பணிகள் மரு.ஜெயந்தி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு. மாது, உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருமதி.மாலா, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் திரு.குருராஜன், முன்னோடி வங்கி மேலாளர் திரு.கண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழு செயலாளர் திரு.வ.கருணாநிதி, மாவட்ட புள்ளிஇயல் அலுவலர் திரு.ஆதிமுலம், தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies