அந்த வகையில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 432 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் நவம்பர்-14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு வாரமாக அனுசரிக்கும் வகையில் நடைபெற்ற வானவில் ஓவியப்போட்டிகளில் எனக்குள் ஒரு முதல்வர் (நான் விரும்பும் சமூக மாற்றங்கள்), குழந்தை தலைவர் விருதுகள், நான் என் அடையாளம் (Canvas Painting) ஆகிய மூன்று தலைப்புகளில் முதல் 3 இடங்களை பெற்ற அரசு இல்லத்தின் பராமரிப்பில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளின் போது குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், துணை ஆட்சியர் பயிற்சி திரு.செந்தில்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சையது ஹமீத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி.கு.மரியாம் ரெஜினா, ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.சாகுல் அமீத், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.ஆ.செல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.