Type Here to Get Search Results !

பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் மாநாடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் மாநாடு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் மாநாடு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (24.01.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பான கல்வி கிடைத்திட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அத்தகையை திட்டங்களை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் முழுமையாக கொண்டு சேர்த்து மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த கல்வி கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள், துவக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கான மாநாடு இன்றைய தினம் நடைபெற்றது.


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்திட இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் - 2009 -ன் படி பள்ளி மேலாண்மைக்குழு ஏற்படுத்தப்பட்டது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றலைத் தவிர்த்தல்,கற்றல் மேம்பாடு, மேலாண்மை, கட்டமைப்பு ஆகிய நான்கும் பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கிய பணிகளாகும்.


6 முதல் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதோடு மட்டுமின்றி இடைநிற்றல் இல்லாது பள்ளிக்கு வரவைத்தல், மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து தேவையான வசதிகள் பள்ளியில் உள்ளதனை உறுதி செய்தல், பள்ளி செயல்பாடுகள் மற்றும் மாணவர்களின் திறன்களை கவனித்து அதற்கேற்ற கற்றல் சூழலை உருவாக்குதல், பள்ளியில் காலை மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவு சுவையானதாகவும், சத்தானதாகவும் குழந்தைகளுக்கு கிடைப்பதனை உறுதி செய்தல், பல்வேறு மூலங்களில் கிடைக்கப்பெறும் நிதி ஒதுக்கீடுகளை பள்ளிக்கு முறையாக பயன்படுத்துவதனை உறுதி செய்தல், பள்ளி மேம்பாட்டுத் திட்டம் உருவாக்குதல், இடம் பெயர்ந்த மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், பள்ளி அமைந்திருக்கும் பகுதிகளில் போதை பொருட்கள் இல்லாத பகுதியாக இருப்பதனை உறுதி செய்தல் உள்ளிட்டவை பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகளாக உள்ளது.


அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களும் அரசு வழங்கி வருகின்ற காலை உணவு திட்டம், இலவச பாடநூல், சீருடை எண்ணற்ற திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு சிறந்த கல்வியை அடிப்படையிலேயே நன்கு கற்றால் உங்கள் எதிர் காலத்தை சிறப்பானதாக உருவாக்கிக்கொள்ள முடியும். அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பதை உறுதி செய்வதற்கும் பள்ளிக்கு உறுதுணையாக செயல்பட்டு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இத்தகையை குழுவில் உள்ள அனைவரும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.


சிறப்பாக சேவையாற்றிய பள்ளிமேலாண்மைக் குழு தலைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், கேடயங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். கடத்தூர் ஒன்றியம் ஒபிலிநாயக்கன அள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக பள்ளி வளர்ச்சிக்கு புரவலர் திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட ரூ.1,20,000/- காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவித்திட்ட அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மாநில கருத்தாளர் திரு.மரியசூசை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies