அருவியென ஆர்ப்பரிக்கும் பேரழகே! காவிரியே ! என்ற தலைப்பில்15 கவிஞர்கள் அற்புதமான கருத்துக்களை கவியாக பாடி முடித்தனர். ஒவ்வொருவரும் காவிரி அன்னையை தூய்மையாக பராமரிக்க வேண்டியதைப் பற்றியும், காவிரியில் மேகதாட்டு அணைக்கட்டும் நடவடிக்கையை தடுத்திட வேண்டுமென்றும், தமிழகம் பெற வேண்டிய நீரின் அளவை கூடுதலாக்கி பெற்றிடவும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும் கவியரங்கம் அமைந்திருந்தது.
காவிரியின் அழகு, காவிரியின் நதிமூலம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, மேட்டூர் அணை, கல்லணை, பூம்புகார் என காவிரியின் வழியில் இருக்கும் சிறப்புகளை எல்லாம் அழகுற கவி தொடுத்தனர். இவை மட்டுமின்றி தங்கள் கவிதைகளில் காவிரி எவ்வாறெல்லாம் தமிழகத்தை செழிக்க வைத்தது, இப்போது எவ்வாறெல்லாம் விவசாயம் பாதிக்கின்ற அளவிலே நீரின் அளவு குறைந்து விட்டது என்பதையெல்லாம் தங்கள் மனதின் வேதனைகளை அழகுற தங்கள் கவிதைகளில் எடுத்துச் சொன்னார்கள்.
இந்த சிறப்புமிகு கவியரங்கத்தை தமிழ்மகன் ப. இளங்கோ அவர்கள் தலைமையேற்று நடத்தினார்கள். கவிஞர் சிவம் முனுசாமி அவர்கள் வரவேற்புரை நவின்றார். கவிஞர் கூத்தப்பாடி பழனி அவர்கள் வாழ்த்துரை வழங்க கவியரங்கு சிறப்புற நடைபெற்றது. கவியரங்கில் கவிஞர்கள் கூத்தப்பாடி மா.பழனி, இரா.மதனகோபால், சிவம்முனுசாமி, சு.இரவிச்சந்திரன், ந.முகுந்த மாதவன், பெ.விநாயகம், வத்தலாபுரம் முருகேசன், கோகுல் காளியப்பன், கே.வி.குமார், நா.நாகராஜ், தகடூர்.தமிழரசன், வெகுறள்மொழி, சண்முகப்பிரியா ஆகியோர் கவி பாடினர்.
கவிஞர்களுக்கு சான்றுகளும், கதராடையும் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பென்னாகரம் கிளை சார்பாக மன்றத் தலைவர் மலர்வண்ணனுக்கு முத்தமிழ் வாணர் என்ற விருது வழங்கி பாராட்டியது. நிகழ்வின் இறுதியில் கவிஞர் வத்தலாபுரம் முருகேசன் நன்றி கூற கவியரங்கம் இனிதே நிறைவடைந்தது. கூட்டத்தின் ஒருங்கிணைப்புப் பணியை கவிஞர் கே.வி.குமார் அவர்கள் சிறப்புற மேற்கொண்டார். நிகழ்ச்சி முடிவில் இனிய விருந்தோடு நிகழ்வு நிறைவுற்றது.
இந்நிகழ்வு அரங்கமோ,மேடையோ, இருக்கைகளோ, ஒலி, ஒளி என ஏதுமின்றி இயற்கை அழகோடு ஆற்றங்கரைக் கவியரங்கம் வித்தியாசமாகவும் ,உயிரோட்டமாகவும் அமைந்தது. கவிஞர் பெருமக்கள் குழந்தைகள் சூழ குடும்பத்தோடு கலந்து கொண்டவிதம் பாராட்டத்தக்கதாகும். தமிழையும், தமிழ்ப்பற்றையும், காவிரியின் பெருமையையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நன்முயற்சியாகும் இதுவாகும். இந்நிகழ்வில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.