Type Here to Get Search Results !

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில்  ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் 6.1.2023 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது. தருமபுரி மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 


இந்நிகழ்சிகள் நடத்துவதற்கான அனுமதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வழங்கப்படும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாக www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் அளித்து அரசாணை மற்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் 300-க்கு மிகாத மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 399-க்கு மிகாத மாடுகள் மட்டுமே போட்டியில் பங்குபெற அனுமதியுண்டு. ஏற்கெனவே அரசிதழில் வெளிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் விழா நடத்த அனுமதி வழங்கப்படும். இந்நிகழ்ச்சி தொடர்பான அனைத்து முன்னேற்பாடுகளையும் மூன்று தினங்களுக்கு முன்னதாகவே முடித்திருக்கவேண்டும். நிகழ்விடத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், CCTV கண்காணிப்பு வசதிகள், மருத்துவ வசதி, காளைகளுக்கான தண்ணீர், தீவன வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


நிகழ்வுகள் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 04.00 வரை மட்டும் நடத்த அனுமதி வழங்கப்படும். நிகழ்சி நடைபெறும் இடத்திற்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கிணறு ஆபத்தான பள்ளங்கள் ஆகியன தடுப்புகள் வைத்து மூடப்படவேண்டும். வாடிவாசல் முதல் காளைகள் சேகரிக்கப்படும் இடம் வரை 8 அடி உயர இரட்டை தடுப்பரண்கள் அமைக்கப்பட வேண்டும். காளைகள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அதன் உரிமையாளர்கள் அருகில் இருப்பதை விழாக் குழுவினர் உறுதி செய்யவேண்டும். 


வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் தவிர வேறு எவரும் நிகழ்விடத்திற்குள் நுழையக்கூடாது. காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும். பரிசோதனையில் நிராகரிக்கப்படும் காளைகள் வாடி வாசலுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது. வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். போதிய அளவில் அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யவும், அவசர ஊர்திகள் நிகழ்விடத்திலிருந்து செல்வதற்கான வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அனுமதி இல்லாமல் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடத்தப்படக்கூடாது என்றும் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.


முழு நிகழ்வும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் காப்பீடு செய்யப்பட்டிருக்கவேண்டும். அனுமதியின்றி நடத்தப்படும் நிகழ்வுகளில் உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும், அனுமதி வழங்கப்படும் இடத்தில் எவ்விதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் நிகழ்சி நடைபெறுவதை உறுதி செய்துகொள்ளவும் அலுவலர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாலசுப்ரமணியம், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.டி.கே.கீதாராணி (தருமபுரி), திரு.வில்சன் ராஜசேகர் (அரூர்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.பழனிதேவி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ரெ.சாமிநாதன், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், உட்பட ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies