பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட கோட்டூர் மலை மற்றும் ஏரிமலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடையே சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து இன்றைய தினம் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கேட்டறியப்பட்டது.
குறிப்பாக, இந்தியாவில் தேர்தல் ஆரம்பித்த காலத்திலிருந்து கடந்த சட்டமன்ற பொது தேர்தல் வரை இம்மலை கிராமங்களில் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பொருட்களும் கழுதைகளை பயன்படுத்தி இம்மலைக்கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்பொழுது இந்நிகழ்வுகளுக்கு மாற்றாக டிராக்டர்கள் மற்றும் பணியாளர்களை பயன்படுத்தி தேர்தலுக்கான அனைத்து பொருட்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்ல அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடாக கோட்டூர் மலை மற்றும் ஏரிமலை அடிவாரத்திலிருந்து நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் இம்மலைக் கிராமங்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மண் சாலை அமைத்திட உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த தேர்தல் ஆரம்பித்த காலத்திலிருந்து இதுநாள் வரை கழுதைகள் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் கொண்டு செல்லும் நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மலைக்கிராம பகுதிநேர நியாய விலைக்கடைகளுக்கு நான்கு சக்கர வாகனங்களில் குறிப்பாக டிராக்டர்களை பயன்படுத்தி, நியாய விலைப் பொருட்களை எடுத்து செல்ல உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் திரு.சௌகத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுருளிநாதன், திரு.ஜெகதீசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.