இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024, உயர் தொழில்நுட்பத் தொழில்களை ஈர்ப்பதையும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொழில்துறையினர், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் வர்த்தக அமைப்புகள், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை ஒன்றிணைக்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் “ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கின்“ ஒரு பகுதியாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதற்கான லோகோவை கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் தமிழ்நாட்டில் மொத்தம் 6,64,180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதில் தொழில் துறையில் 3,79,809, ஆற்றல் துறையில் 1,35,157, நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாடு 62,939 தகவல் தொழில் நுட்ப துறையில் 22,130, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் 63,573 முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலமாக நேரிடையாக 14,54712 நபர்களுக்கும் மறைமுகமாக 12,35,945 நபர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படும்.
இந்த முதலீட்டாளர் மாநாட்டின் முன்னோட்டமாக, நாட்டின் பொருளாதாரத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களிக்கும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் உள்ளூர் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் “தொழில் முதலீடுகள் மாநாடு“ நடத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாடு 22.11.2023 அன்று நடைபெற்றது. இதில் தருமபுரியில் உள்ள தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி தருமபுரி மாவட்டத்தில் சுமார் 546 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தருமபுரி மாவட்டத்திற்கு 47 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ. 699.17 கோடி மதிப்பில் புதிய முதலீடுகள் கண்டறியப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக உணவுசார் தொழில்கள், டெக்ஸ்டைல், இ-வாகனம், வேளாண் சார் தொழில்கள், ஃபார்மா, எலக்ட்ரிகல், இன்ஜினியரிங், கட்டிடம் சார் பொருட்கள், பிளாஸ்டிக்ஸ், பிளாஸ்டிக்ஸ் மாற்று பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
இதன் மூலம் நேரிடையாக 2,567 வேலைநாடுநர்கள் தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெற உள்ளனர், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

