தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், வாணியாற்றின் குறுக்கே ரூ.4.59 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (23.01.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து கிராம பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றார்கள்.
அந்த வகையில் தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், வாணியாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.4.59 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பளிப்பட்டி, வேட்ரப்பட்டி, வடுகப்பட்டி, ஈச்சம்பாடி, மதியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நபார்டு திட்டம் 2021-2022-ன் கீழ் கீழானூரிலிருந்து வேப்பநத்தம் செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, மே - 2022-ல் பணிகள் துவங்கப்பட்டு, தற்பொழுது எண்பது சதவிகித பணிகள் நிறைவுற்றுள்ளது.
மேலும், இம்மேம்பாலம் அமைவதால் அரூரிலிருந்து தீர்த்தமலை செல்லும் பொதுமக்களின் பயணநேரம் வெகுவாக குறையும். இப்பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சர்வோத்தமன், திரு.கணேசன், உதவி பொறியாளர்கள் திருமதி.பூங்கொடி, திருமதி.சத்திவாணி, திரு.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.gif)

