மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய விழிப்புணர்வு மற்றும் சர்வதேச சிறுதானிய திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 நவம்பர், 2023

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய விழிப்புணர்வு மற்றும் சர்வதேச சிறுதானிய திருவிழா.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2023-24-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சிறுதானிய விழிப்புணர்வு மற்றும் சர்வதேச சிறுதானிய திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2023-24-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சிறுதானிய விழிப்புணர்வு மற்றும் சர்வதேச சிறுதானிய திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று (20.11.2023) தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- 2023-24-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களாகிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சிறுதானிய திருவிழா இன்று தருமபுரி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. 


மேலும், சிறுதானியங்கள் முக்கியதுவம் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைத்து, அனைத்து வகையான பாராம்பரிய சிறுதானிய சிறப்புகள் தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் வழங்கி பல்வகை சிறுதானிய உணவுகளை தயார் செய்து அச்சிறுதானியத்தின் நன்மைகள் குறித்து குறிப்புகளுடன் நுகர்வோராகிய பொது மக்களின் பார்வைக்கு வைத்து (பள்ளி, கல்லூரி மாணவர்கள்) விநியோகம் செய்து நேரடி விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


நம் முன்னோர்களால் ஆதி காலத்திலிருந்தே உண்ணப்பட்டுவந்த ஆரோக்கியமான உணவில் முதல் இடத்தைப் பிடிப்பவை சிறுதானிய வகைகளான குதிரைவாலி, கேழ்வரகு. தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவைதான். எனவே, இந்தியாவின் பாரம்பரியமிக்க சிறுதானிய வகைகளை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் விதமாக 193 ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்ததால், 2023-ஆம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.


உடலுக்கு நல்லது என்று பல உணவு வகைகளைப் பயன்படுத்தும் நாம், சிறுதானிய உணவுகளை உண்பதைக் காலப்போக்கில் மறந்துவிட்டோம். ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து சத்துக்களும் சிறுதானியங்களில் உள்ளது. சிறுதானியங்களில் நார்ச் சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் நாம் உண்ணும்போது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.


சிறுதானியங்களில் சத்துக்களுடன் பல மருத்துவக் குணம் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பு வேதிப்பொருட்களும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருட்களும் உள்ளன, சிறுதானியங்களில் உள்ள கிளைசிமிக் இன்டெக்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது. இதிலுள்ள மாவுச்சத்து மெதுவாகச் செரிமானமாவதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு ஆகும். சிறுதானியங்களில் உள்ள லிக்னின் என்ற பொருள் மருத்துவக் குணம் உடையது. இது குடல் சுத்தமாவதற்கு மிகவும் உதவுகிறது.


மாதவிடாய் பிரச்சினை, இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைச் சீராக்கும் வல்லமை சிறுதானிய உணவுக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்சினைகள் வராமல் சிறுதானியங்கள் தடுக்கின்றன. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள் உடல் செல்களை உறுதிப்படுத்தி எலும்புகளுக்கு உறுதி அளிக்கின்றன.


அதிக சத்துக்களுடன் நிறைந்த மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய சிறுதானியங்கள் ஏழைகளின் உணவாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலை மாறி, சிறுதானிய உணவுப் பழக்கம் வீடுகளில் தொடங்கி உணவகங்கள் வரை பரவத் தொடங்கியுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளார் திருமதி.தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு.இராமதாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பரமணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ராஜகுரு, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) திருமதி.இ.மான்விழி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad