தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கற்றல் கற்பித்தல் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி அவர்கள் தலைமை தாங்கினார். கல்வி - 40 மற்றும் நெல்லிக்கனி நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து கிராமப்புற பள்ளி மாணவர்கள் கற்றலை மேம்படுத்துவதற்காக தொழில் நுட்பகருவிகளை வழங்கினார்கள். பள்ளி மாணவர்களுக்கு கற்றல் எளிமையாக இருக்கும் வகையில் பாடங்களை வீடியோக்களாக மாற்றி அதனை திரையில் பார்க்கும் வகையில் LED டிவி மூலம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. டி.வி மற்றும் உபகரணங்கள் சின்னப்பள்ளத்தூர், B. அக்ராகரம், சின்ன பெரமனூர் பள்ளிகளுக்கு வழங்கும் நிகழ்வு மற்றும் செயல்முறை விளக்கம் சின்னப்பள்ளத்தூர் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் படக்காட்சிகளாக வடிவமைக்கப்பட்டு வழங்கி இருக்கிறார்கள். அத்துடன் வினாடி வினா, பொது அறிவு, திருக்குறள், நீதிக் கதைகள் போன்றவைகளும் குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கி இருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்நிகழ்வில் கல்வி 40 நிர்வாகி பிரித்வி, நெல்லிக்கனி அறக்கட்டளை நிர்வாகி விஜயராஜேந்திரன், வசந்த் மற்றும் கிருஷ்ணகிரி ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மயில்சாமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் அருள்,மகேஷ், தலைமை ஆசிரியர்கள் மைமுனா, நரசிம்மன், ஆசிரியர்கள் வளர்மதி, கல்பனா, பழனிச்செல்வி, ராஜேஸ்வரி, ரேகா தருமண் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.