தருமபுரி டவுன் நகராட்சி துவக்கப்பள்ளியில் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கான மைய சமையற்கூடம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துவக்கப்பள்ளிகளுக்கும் 2-ஆம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, தருமபுரி டவுன் நகராட்சி துவக்கப்பள்ளியில் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கான மைய சமையற்கூடம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (04.08.2023) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விதி 110-இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி, தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாலக்கோடு வட்டாரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள 111 ஆரம்ப பள்ளியில் பயிலும் 5400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1013 அரசு ஆரம்ப பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 51,538 மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் விரிவாக்கம் செய்ய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென புதிதாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள சமையல் பாத்திரங்களின் தரம், எண்ணிக்கை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும், சமையற்கூடம் அமைந்துள்ள இடம், சமையல் பொருட்கள் இருப்பு அறை, குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவுகளை பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
முன்னதாக, தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட கங்கரன் குட்டை பகுதியில் ரூ.60.00 இலட்சம் மதிப்பிட்டில் நகர்ப்புர வீடற்றோருக்கான தங்குமிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் பணியினை தரமானதாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கிணார்கள்.
இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பிடமனேரியில் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் 1873 விடுகளுக்குட்பட்ட 1௦,000 மக்கள்தொகைக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முதற்கட்டப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதியில் முறையாக ஆக்கரமிப்புகளை அகற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் பணியினை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்வுகளின் போது தருமபுரி நகராட்சி ஆணையாளர் திரு.புவனேஷ்வரன், நகராட்சி பொறியாளர் திருமதி.புவனேஷ்வரி, தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அனந்தராமன் விஜயரங்கன், திருமதி.சத்யா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.