Type Here to Get Search Results !

தர்மபுரியில், உணவு பாதுகாப்புத் துறை சார்பாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு மேற்பார்வையாளர் பயிற்சி.


தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி, ஐ.ஏ.எஸ்., அவர்கள் ஆலோசனைப்படி சமூக நலம் மற்றும்  சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்போடு  மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள சத்துணவு அமைப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக நேற்று மற்றும் இன்று தலா ஐம்பது பேர்க்கு ஒன்றியத்துக்கு 10 பேர் வீதம் தேர்வு செய்து தர்மபுரி கடைவீதி வர்த்தகர் மஹாலில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி முகம் நடைபெற்றது. உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ.பானுசுஜாதா, அவர்கள் தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு  அலுவலர்கள் நந்தகோபால் மற்றும் குமணன் முன்னிலையில் உணவு பாதுகாப்பு துறை அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி பார்ட்னர் சக்சம் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் திருமதி.தாரணி பயிற்சி வழங்கினார்.


மாவட்ட நியமன அலுவலர்  தன் உரையில் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில்  வழங்கும் உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரித்து தரமாகவும் வழங்க இந்த மேற்பார்வையாளர் பயிற்சி மேம்படுத்தும் எனவும் பயிற்சியில் வழங்கப்படும் கருத்துக்களை நன்றாக உள்வாங்கி தங்கள்  பள்ளி சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு  எடுத்துரைத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியதுடன் உணவு தயாரிக்கும் உணவு பாக்கெட் மூலப்பொருள்களில் லேபிள்கள் கண்காணித்து முடிவு தேதிக்கு முன்பாக உபயோகம் மேற்கொள்ள வேண்டும் எனவும், எலி ,கரப்பான்,பல்லிமற்றும் பூச்சிகள் அண்டாமல் கண்காணித்து மையம் சுத்தம் சுகாதாரம் பராமரிக்க கேட்டுக் கொண்டார்.

பயிற்சியாளர் தாரணி அவர்கள் பயிற்சியின் போது உணவுப் பொருள்கள் கெடுவதற்கான இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் ஆபத்து குறித்து முறையே   மண் ,தூசு கண்ணாடி துகள்கள், நெகிழிகள், அசுத்தமான இருப்பிடம் போன்ற இயற்கை காரணிகளாலும், வேதியல் காரணிகளான முறையாக கழுவாத காய்கறிகள், கீரைகள் பழங்கள் மற்றும் காலாவதியான மூலப்பொருட்கள் தேவையற்ற செயற்கை நிறமூட்டிகளாலும்  உணவு ஆபத்து ஏற்படும் மேலும் உயிரியல் ஆபத்துக்களான பூச்சிகள், எலிகள் கரப்பான், பூனை, நாய் இவைகள் நடமாட்டத்துடன் , சுகாதாரமற்ற குடிநீர்  தன் சுத்தம் பராமரிக்காத பணியாளர்கள் நேரடியாக உணவை தயாரித்தல் மற்றும் தொடுவதாலும் உணவு கெடவும் தரம் குறையவும்  வாய்ப்புள்ளது எனவே  மேற்சொன்ன காரணிகளை அறிந்து இவற்றை தவிர்த்து பின்பற்றினாலே நாம் வழங்கும் உணவு தரமாகவும், சுகாதாரமான முறையில் வழங்குவதாக இருக்கும் எனவும் தன் சுத்தம், சுற்றுப்புற சுத்தம், பாத்திரங்கள் , மூலப் பொருட்கள், உபகரணிகள் முறையாக பராமரிக்க பயிற்சியில் எடுத்துரைத்தார்.


காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்டுகளில்  காண வேண்டிய லேபில் அம்சங்களான உணவு பெயர், தயாரிப்பு முகவரி,தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், சைவ அசைவ குறியீடு, மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் நுகர்வோர் தொடர்பு எண் கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும் என்றும் , வீட்டளவில் உணவுப் பொருட்கள் சிலவற்றில் குறிப்பாக தேயிலை , பால், தேன், மஞ்சள் தூள், மிளகு, நெய் உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்தும் அயோடின் சத்து குறைபாடினால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் அயோடின் உப்பு அயோடின் இல்லாத உப்பு வேறுபாடு  நேரடி செயல் விளக்கம் அளித்து அயோடின் உப்பு அவசியம் குறித்து எடுத்துரைத்துடன், செறி ஊட்டப்பட்ட அரிசி, சமையல் எண்ணெய், பால், கோதுமை மாவு மற்றும் உப்பு ஆகியவற்றில் சேர்க்கப்படும் நுண்ணூட்ட சத்துக்கள் குறித்து விளக்கம் அளித்து அரிசி, சமையல் எண்ணெய், பால் பாக்கெட் மற்றும் உப்பு   பாக்கெட்களில் அது குறித்தான எப் (F) என்ற எழுத்து சிம்பலை நேரடியாக காண்பித்து விளக்கம் அளித்தார் மேலும் மையங்களில் கழிவு பொருட்கள் முறையாக அப்புறப்படுத்த வலியுறுத்தினார்.


தர்மபுரி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தன் உரையில் அனைத்து சத்துணவுமையங்களும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் முறையாக புதுப்பித்து மையங்களில் மாட்டி வைத்திருக்கவும், மையங்களில் தினம் தோறும் தவறாமல் தூய சீசாவில் உணவு மாதிரி எடுத்து வைத்து 24 மணி நேரம் கழித்து முறையாக அப்புறப்படுத்த கேட்டுக் கொண்டார். இறுதியாக சத்துணவு அமைப்பாளர் சக்திவேல் நன்றி தெரிவித்துக் கொண்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies